முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

2 months ago 14

சென்னை,

ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தத்தெடுத்தல், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசால், ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article