புதுடெல்லி,
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனாவுக்கு நாளை 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்ல இருக்கிறார். இந்த பயணத்தில், அந்நாட்டின் வெளியுறவு செயலாளரை மிஸ்ரி சந்தித்து பேசுவார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதில், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விட்டு புதுடெல்லிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், மிஸ்ரியின் சீன பயணம் அமைகிறது.
சமீபத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்த ஜெய்சங்கர் அப்போது கூறும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுடனும், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுடனும் ஒன்றாக பணியாற்றும் உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என கூறினார்.
இது மிக தனித்துவம் வாய்ந்தது. உலக நாடுகளை நீங்கள் உற்று நோக்கினால், அவை எதிரெதிர் குழுக்களாக பிரிவினைப்பட்டு உள்ளது என காணலாம் என்றார்.
சீனா மீது தடைகளை விதிப்போம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என சீனாவும் கூறி வருகிறது. இந்தியா உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் நாடுகள் மீதும் அதிக அளவில் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் சீனா என 2 நாடுகளுடனும் இந்தியா நல்லிணக்க போக்கை கடைப்பிடித்து வருகிறது.
கடந்த மாதம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவுக்கு சென்று அந்நாட்டு வெளியவு மந்திரியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து மிஸ்ரி சீனாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சீன மற்றும் அமெரிக்க உறவை ராஜதந்திரத்துடன் சம அளவில் இந்தியா பராமரித்து வருகிறது.