
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தராப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை சொந்தமாக்கி 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மந்தனா 116 ரன்களும், ஹர்லீன் தியோல் 47 ரன்களும் அடித்தனர். இலங்கை தராப்பில் மல்கி மதாரா, விஹாங்கா மற்றும் சுகன்ந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க வீராங்கனையான ஹாசினி பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் விஷ்மி குனரத்னே (36 ரன்கள்), கேப்டன் சமாரி அத்தபத்து (51 ரன்கள்), நிகாஷி டி சில்வா (48 ரன்கள்) தவிர வேறுயாரும் நிலைக்கவில்லை.
48.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.