முத்தரப்பு ஒருநாள் தொடர்: நியூசிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

3 months ago 15

லாகூர்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னெர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் கேப்டன் பவுமா களமிறங்கினர். இதில் பவுமா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேசன் சுமித், சிறிது நேரம் மேத்யூ பிரீட்ஸ்கே உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜேசன் சுமித் 41 ரன்களிலும், பின்னர் வந்த கைல் வெர்ரைன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வியான் முல்டர் களமிறங்கினார். இதனிடையே மேத்யூ பிரீட்ஸ்கே அரைசதத்தை கடந்து சிறப்பாக விளையாடினார். வியான் முல்டரும் தனது பங்குக்கு சிறப்பாக விளையாட, மறுமுனையில் பிரீட்ஸ்கே சதம் விளாசினார்.

சதம் அடித்த பிறகும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரீட்ஸ்கே 150 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் வியான் முல்டர் அதிரடியாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 304 ரன்கள் அடித்துள்ளது. முல்டர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி மற்றும் வில்லியம் ஒ ரூர்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்க உள்ளது.

Read Entire Article