
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25-ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்தும் விவரங்கள் பெற்று தொகுக்கப்பட்டு உள்ளது.
அந்த விவரங்களின் அடிப்படையில், உபரி என கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப முதன்மை கல்வி அலுவலரால் வருகிற 26-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
பணிநிரவல் கலந்தாய்வில், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், விதவைகள், மனைவியை இழந்தவர்கள், விவகாரத்து பெற்ற ஆசிரியைகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 2 முதுகலை ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதே பள்ளியில் அதே பாடத்தில் உள்ள அடுத்த இளையவரை உபரியாக தேர்வு செய்து பணி நிரவலுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.