முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

5 hours ago 2

தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தால் பசிப்பிணி என்பதே இல்லாத நிலை இருக்கிறது. மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இருக்கின்றன. அவற்றில் 2 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்து 654 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். பல குடும்பங்கள் இந்த ரேஷன் அரிசியை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்துகின்றன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மாநிலம் முழுவதும் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதன்மூலம் 20 லட்சத்துக்கு மேலானோர் பயன் அடைகிறார்கள். இவர்கள் உணவு பொருள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு கால் கடுக்க நடந்து சென்று, கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு, பிறகு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வரவேண்டிய நிலை இருக்கிறது.

முதிர் வயதில் அவர்கள் இந்த ரேஷன் பொருட்களை தங்களது தேவைக்காக வாங்காமலும் இருக்க முடியாது. அதேநேரத்தில் ரேஷன் கடைகளில் இருந்து தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருவதும் சிரமமாக இருந்தது. 'தினத்தந்தி'யின் நெல்லை பதிப்பில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று பொதிகை மலையில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி பற்றி ஒரு சிறப்பு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில், பொதிகை மலையில் காரையாறு அணை அருகில் உள்ள இஞ்சிக்குழி என்ற கிராமத்தில் இப்போது 3 குடும்பங்கள் மட்டும் வசிக்கிறார்கள். அதில் குட்டியம்மாள் என்ற 110 வயதான மூதாட்டியும் ஒருவர். தனியாக வசிக்கும் அந்த மூதாட்டி இப்போது காட்டில் விளையும் கிழங்கு, பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்.

குட்டியம்மாளுக்கு 2021-ல் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு, முதியோர் பென்ஷனும், வீட்டுக்கு சோலார் மின்வசதியும் வழங்க ஏற்பாடு செய்ததை இன்றும் நன்றியோடு கூறுகிறார். அவருக்கு ரேஷன் கார்டு இருந்தாலும் காரையாறு ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. யாராவது கொண்டு வந்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய செய்தி வெளியாகியிருந்தது. இந்த குறை இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தால் நிவர்த்தியாகப்போகிறது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் தமிழக அரசு இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டத்தையும் தொடங்கிவிட்டது.

இதற்காக பரீட்சார்த்தமாக சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள தலா 2 தாலுகாக்களில் 10 ரேஷன் கடைகளில் இருந்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இந்த மாதம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தினால் பயனடைந்துள்ள முதியோர், தங்கள் முதிர் வயதில் இப்படி வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் கொடுப்பதால் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது என்று வாழ்த்துகிறார்கள். சோதனை அடிப்படையிலான இந்த திட்டத்தை நிரந்தரமாக்கி, மாநிலம் முழுவதும் உள்ள 15 லட்சம் முதியோருக்கான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இல்லம் தேடி சென்று வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

Read Entire Article