முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்; ரோடு ஷோ நடத்தி பொதுமக்களுடன் சந்திப்பு

6 hours ago 1

திருவாரூர்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூருக்கு இன்று வருகை தருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் புறப்பட்டு திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார்.

இதன்பின்னர், மாலையில் அங்கிருந்து புறப்பட்டு பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

பின்னர் ரெயில்வே ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து சன்னதி தெருவில் உள்ள இல்லத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர், இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்.

நாளை சன்னதி தெருவில் இருந்து காரில் புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ். நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வழியாக திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் வரவேற்பு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article