சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாக்கள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீஸார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.