சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்றதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.