சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எஸ்.ரகுபதி ஆகியோரது இலாகாக்கள் நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி நீக்கப்பட்டனர். புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அப்போது, பொன்முடியிடம் இருந்த வனத்துறை, ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் வகித்த பால்வளத்துறை மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை முத்துசாமிக்கும் கூடுதலாக வழங்கப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட 10 நாட்களில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி ஆகியோரின் இலாகாக்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக மாற்றியுள்ளார். இதுகுறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை இலாகா மட்டும் பறிக்கப்பட்டு, கூடுதலாக சட்டத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.ரகுபதி வகித்து வந்த சட்டத்துறைக்கு பதில் கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்.ரகுபதி இனி, இயற்கை வளத்துறை அமைச்சராக செயல்படுவார்’’ என கூறப்பட்டுள்ளது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி அமைச்சர்கள் துரைமுருகன் ரகுபதி இலாகாக்கள் மாற்றம் appeared first on Dinakaran.