சிவகங்கை, மார்ச் 25: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், ஆரோக்கியசாமி, கென்னடி, இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியினை அரசனேரி கீழமேடு கிராமத்தினர் சங்கர், ஆறுமுகம், செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாடுகளும், 117 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்டிருந்த திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 20 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு டைனிங் டேபிள், டிரெஸ்சிங் டேபிள், பொங்கல் பானை, பேக் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியினை சிவகங்கை, காஞ்சிரங்கால், சூரக்குளம், வாணியங்குடி, புதூர், கருங்காலகுடி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், சோழபுரம், என சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான உற்சாகமாகக் கண்டுகளித்தனர். இதில் 5 பேர் காயமடைந்தனர்.
The post முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி appeared first on Dinakaran.