ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்

1 hour ago 3

ஊட்டி, மே 15: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (15ம் தேதி) காலை 10 மணிக்கு துவங்கும் 127-வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர் கண்காட்சியை காண மட்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும். பல லட்சம் கொய்மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (15ம் தேதி) ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி துவக்க விழா நடக்கிறது.

மலர் கண்காட்சியை துவக்கி வைக்கும் தமிழ்நாடு முதல்வர், தொடர்ந்து பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களையும் பார்வையிடுகிறார். பூங்காவையும் சுற்றிப் பார்க்கிறார். பின்னர், இத்தாலியன் பூங்காவில் நடக்கும் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி, திபெத் மக்களின் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கிறார். விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ராசா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அதன்பின்னர், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மலர் கண்காட்சியையொட்டி பல லட்சம் கொய் மலர்கள், ரோஜா மலர்களை கொண்டு தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், படகு மற்றும் தர்பார் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொய் மலர்கள் மற்றும் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கும் நிலையில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article