சென்னை:“கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும், அருகதையும் இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு சொல்வதை செய்யும் அரசு, சொல்வதற்கு மேலாகவும் மக்கள் சேவை செய்யும் அரசு, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு தெரிவித்ததைப்போல், “நான் ஓட்டு போட்டவருக்கு மட்டும் முதல்வரல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நானே முதல்வர்”, அந்த வகையில் நாம் ஏன் திமுக அரசுக்கு ஓட்டுப் போட தவறிவிட்டோம் என்று சிந்திக்கின்ற வகையில் இந்த திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று சூளுரைத்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை 90%-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.