புழல் காவாங்கரையில் பாழடைந்த தணிக்கை சாவடிக்கு பதில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தல்

15 hours ago 2

புழல்: புழல் அருகே காவாங்கரையில் ஏற்கெனவே இயங்கி வந்த பழைய வணிகவரி தணிக்கை சாவடி கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து, தற்போது அங்கு பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தில் அரசு அலுவலகங்களை கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை-கொல்கத்தா செல்லும் ஜிஎன்டி தேசிய நெடுஞ்சாலையில், புழல் அருகே காவாங்கரையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வணிகவரி துறையின் தணிக்கை சாவடி கட்டிடம் இயங்கி வந்தது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியதால், இந்த தணிக்கை சாவடி அலுவலகம் எவ்வித பயன்பாடுமின்றி மூடப்பட்டது. இதனால் இங்குள்ள தணிக்கை சாவடி கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், அங்கு அதிகளவு முட்புதர் காடுகள் வளர்ந்துள்ளதால், அதிலிருந்து வெளியே வரும் பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகள், அருகிலுள்ள நகர் பகுதி வீடுகளுக்கு படையெடுத்து வருகின்றன.

இதனால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். மேலும், அந்த இடத்தின் மதிப்பு தற்போதைய மார்க்கெட் மதிப்பு பலகோடி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே, இத்தகைய சிறப்புமிக்க காவாங்கரையில் பழுதடைந்த நிலையில் உள்ள தணிக்கை சாவடி கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, அங்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்களை கட்டி, அரசு மற்றும் மாநகராட்சி அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டுவர அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post புழல் காவாங்கரையில் பாழடைந்த தணிக்கை சாவடிக்கு பதில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article