திருத்தணி பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் 5வது நாளாக ஸ்டிரைக்

16 hours ago 2

திருத்தணி: திருத்தணி பகுதிகளில் கூலி உயர்வை வலியுறுத்தி, இன்று 5வது நாளாக நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபட்டை, சொரக்காய்பேட்டை, ஆர்.கே.பேட்டை, விடியங்காடு, வங்கனூர், புச்சிரெட்டிபள்ளி, மத்தூர் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மொத்த வியாபாரிகளிடமிருந்து நூல், பாவு பெற்று, லுங்கி உற்பத்தி செய்து, மீட்டர்கணக்கில் நெசவாளர்கள் கூலி பெற்று வருகின்றனர்.

இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் விசைத்தறிகள் இயக்குவது, பாவு சுற்றுவது, நூலுக்கு பசை மற்றும் சாயம் போடுவது உள்பட பல்வேறு பணிகளில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்கால விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தங்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை முதல் இன்று 5வது நாளாக திருத்தணி தொகுதியை சேர்ந்த ஏராளமான நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கமின்றி முடங்கியுள்ளன. இதனால் அப்பகுதி நெசவாளர்களின் வாழ்வாதராம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தங்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விசைத்தறிகளால் லுங்கி உற்பத்தி முடங்கியுள்ளது. தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், நாளை முதல் பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நெசவாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

The post திருத்தணி பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் 5வது நாளாக ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Read Entire Article