மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்து அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த பிப்.25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மக்களவை தொகுதி வரையறையால், தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.க்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும்.