
பெங்களூரு,
கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரும் பாஜகவை சேர்ந்தவருமான அசோக், பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் முயற்சி தோல்வி அடைந்தாலும், பிரார்த்தனை தோல்வி அடையாது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவருக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசை இருப்பது தெளிவாகி உள்ளது. முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பினர் வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். காங்கிரஸ் மேலிடமும் சித்தராமையாவை மாற்ற முன்வந்துள்ளது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவது உறுதி. இதனை நான் சொல்லவில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே சொல்லி வருகின்றனர். டி.கே.சிவக்குமார் தான் அடுத்த முதல்-மந்திரி என்று சில எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக பேசி வருகிறார்கள். டி.கே.சிவக்குமார் கோவில், கோவிலாக செல்வது முதல்-மந்திரி பதவிக்காக தான். அதற்கான காலம் கூடி வந்திருப்பதால், தனது பிரார்த்தனையை நிறைவு செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம், மற்றொரு உத்தரவாதம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.