ராய்ச்சூர்,
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை மாற்றும் திட்டம் இல்லை. காங்கிரஸ் அரசு நிலைத்து நீடிக்கும். அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று நான் அதிகமாக நம்பினேன். ஆனால் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை கவனிப்போம்.
காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பினோம். அதேபோல் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி சித்தராமையாவின் கீழ் நாங்கள் பணியாற்றுகிறோம். வரும் நாட்களிலும் அவருக்கு கீழ் பணியாற்றுவோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நான் எப்போதும் நம்புவது இல்லை. வரும் நாட்களிலும் நம்ப மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.