ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் குர்பாஸ் 5 ரன்களுக்கும் , செட்குல்லா அடல் 21 ரன்களுக்கும், ரஹ்மத் 2 ரன்களுக்கும் , அஸ்மத்துல்லா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் முகமது நபி, ஷாஹிதி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் தொடர்ந்து நிலைத்து விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர் .
இறுதியில் ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. நபி 84 ரன்கள் , ஷாஹிதி 52 ரன்கள் எடுத்தனர். . வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 10 விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.