முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினிகாந்த், விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து

3 hours ago 1

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்துள்ளனர். தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

`இளைஞர் அணிதான் என் தாய்வீடு' என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதல்-அமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில், "72-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ,க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக பா.ஜனதா சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில், " தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ்வலைதளத்தில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார். அமைச்சர் பெருமக்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதல்-அமைச்சர் அவர்கள் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதல்-அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து முதல்-அமைச்சர் அவர்களை வாழ்த்தி வணங்கினோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article