
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன். சுற்றுலாவிற்காக காஷ்மீர் சென்ற நம் மக்கள் மீது நடைபெற்ற கோழைத்தனமான கொடூர தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழுந்து தங்களது கண்டனங்களையும் வேதனைகளையும் பதிவு செய்து வருகிறது. நாட்டு மக்களும், தலைவர்களும் நமக்கு ஆறுதல் சொல்லி நமது நடவடிக்கைகளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு அரியணை ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை, உள்நாட்டு தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்திற்கும் எதிரான தன் கடுமையான யுத்தத்தை முன் வைத்துள்ளார். தன் உறுதியான நடவடிக்கைகளின் மூலம், நாய்நாட்டைப் பாதுகாத்து வருகிறார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட திருமாவளவனின் கருத்தில் பாஜக அரசு 370 வது சட்டப்பிரிவை நீக்கியதை குறை சொல்வதுதான் இப்போது விஞ்சி நிற்கிறது. இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். திருமாவளவனின் இந்தியா கூட்டணிக்கு காஷ்மீர் பழையபடி நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான பிரிவினைவாதம் பேசும் பத்தியாகவே இருக்க வேண்டும் லால் சவுக்கில் இந்தியக் கொடி பறக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும்போது இந்தியா கூட்டணியும் அதன் பங்காளியான திருமாவளவனும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில் மதிப்பிற்குரிய உள்துறை மந்திரி அமித்ஷாவை பதவி விலகச் சொல்கிறார் திருமாவளவன். அதே போன்று தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய சாவுகள், காவல் நிலைய மரணங்கள், சாதிய படுகொலைகள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று, காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர்.1 முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை பதவி விலகச்சொலவாரா திருமாவளவன்?.
தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட முடியும் என்று மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் நடவடிக்கை நம் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் தேசத்தின் ஒற்றுமைக்காக உரத்த குரல் கொடுக்காமல் இந்த நேரத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் திருமாவளவனின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன். நம் உறவுகளை எல்லாம் உயிரற்ற சடலங்களாக்கி மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜசு அரசு தீவிரவாதத்திற்கு எதிராக எந்த உச்சபட்ச நிலைக்கும் செல்லும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களே நிறைய உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும். ஆனால், அதற்கு துணை நிற்காமல் தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.