
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூர் ஏமனூர் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30 வயது). இவரது மனைவி சீதாலட்சுமி (29 வயது). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவகுமார் குடும்பத்துடன் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்தார். அங்கு சரிவர வேலை இல்லாததால் சிவக்குமார் குடும்பத்துடன் கடந்த வாரம் சொந்த ஊரான கொண்டலூருக்கு வந்தார்.
இந்த நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து சீதாலட்சுமி மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சீதாலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.