முதலியார் குப்பம் படகு குழாமில் பழுதடைந்து காணப்படும் படகுகள்: பற்றாக்குறையால் பயணிகள் அவதி

2 days ago 2

செய்யூர், ஜன.30: முதலியார் குப்பம் படகு குழாமில் படகுகள் பழுதாகியுள்ளதால் படகு சாவரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பழுதடைந்த படகுகளை சீரமைக்கவும், புதிய படகுகள் கொண்டு வரவும் சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ளது முதலியார் குப்பம். இங்குள்ள பக்கிங்காம் கால்வாய் செல்லும் பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கு கடற்கரையோரம் ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரையில் நீர் வழி பயணம் செய்வதற்காக பக்கிங்காம் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திற்கு பின் ஆங்காங்கே அமைந்துள்ள பக்கிங்காம் பகுதிகள் சுற்றுலாத்தலமாக மாறியது. இதனையடுத்து, இந்த சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து இங்குள்ள துடுப்பு படகு, பெடல் படகு, கையாக் படகு, வாட்டர் ஸ்கூட்டர், பனானா படகு, வேகப்படகு, மோட்டார் படகு உள்ளிட்ட பல்வேறு படகுகளில் படகு சவாரி மேற்கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், 5 கிமீ தொலைவில் கடலோர சுற்றுலா துறையினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஐலேண்ட் தனித்தீவு சென்று இங்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சுற்றுலா துறை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து தருவதால் இந்த சுற்றுலா தளம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள படகுகள் பல வருடங்கள் பழமையானதாகும். தற்போது இந்த படகுகளில் பல தரமிழந்து படகுகள் மேல் பூசப்பட்டுள்ள வண்ணங்கள் தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. மேலும், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை படகுகளில் பொறுத்தப்பட்டிந்த இன்ஜின்கள் சரியாக இயங்கி வந்த நிலையில் தற்போது அவை முற்றிலும் பழுதாகியுள்ளது. இதற்காக, படகு குழாம் நிர்வாகம் மாற்று இன்ஜின்கள் பொறுத்தியும் தொடர்ந்து பழுதாகி படகுகள் ஆங்காங்கே நின்று விடுவதாக கூறப்படுகிறது. படகுகள் பழுதானதாலும் இன்ஜின்கள் அவ்வப்போது கோளாறு கொடுப்பதாலும் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டு பழுதான படகுகளை மாற்றி புதிய படகுகள் கொண்டு வர தமிழ்நாடு சுற்றுலா துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post முதலியார் குப்பம் படகு குழாமில் பழுதடைந்து காணப்படும் படகுகள்: பற்றாக்குறையால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article