முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 15,000 நோயாளிகளுக்கு உயர் அறுவை சிகிச்சை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

3 months ago 21

ஆலந்தூர்: முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.1.334 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் பேருக்கு உயர் அறுவை சிகிச்சை அளிகப்பட்டுள்ளது, என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்ட திமுக சார்பில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா நங்கநல்லூர் 100 சாலையில் நடந்தது. கவுன்சிலர் துர்கா தேவி நடராஜன் தலைமை வகித்தார்.

ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மண்டல உதவி ஆணையர் சீனிவாசன், வட்ட செயலாளர் ஜெ.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கி பேசுகையில், ‘‘முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் வாயிலாக கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இருதயமாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பு மஜ்ஜை, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற உயர் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ரூ.1,334 கோடி மதிப்பில், 15 ஆயிரத்து, 653 நபர்கள் உயர் சிறப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.  இந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சம் பயனாளிகள் சேர்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில், 17.25 லட்சம் பேர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை, 1.47 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக உள்ளனர்.

மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. ரூ.849 பிரீமியம் தொகையாக அரசால் வழங்கப்படுகிறது,’’ என்றார். நிகழ்ச்சியில், நலச்சங்க நிர்வாகிகள் ஐயம்பெருமாள், ராமாராவ், நம்மாழ்வார்,குமர் வேலு, ரவீந்திரன் திமுக நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், அபிஷே கிருஷ்ணா, ரமணா, பிரான்சிஸ், மீன் மோகன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 15,000 நோயாளிகளுக்கு உயர் அறுவை சிகிச்சை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article