சாத்தூர், மே 10: சாத்தூர் அருகே கோணம்பட்டியில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினருக்கு இடையே பொதுநிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒரு பிரிவை சேர்ந்த 14 வயது சிறுவன் தெருவில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற இருவர், சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த சிறுவனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள், கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று கோணம்பட்டியை சேர்ந்த சுமார் 50 பெண்கள் நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் காவல் நிலையத்தில் குவிந்து முற்றுகையிட்டனர். அங்கு இருந்த சார்பு ஆய்வாளர் அருண்குமார் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் பின்னர் அங்கிருந்து பெண்கள் திரும்ப சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.
The post குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தை பெண்கள் முற்றுகை appeared first on Dinakaran.