
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் கணினி ஆய்வகம் அமைப்பதற்காக எனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னைப் பல்கலைக்கழகம் அதன் வளங்களை பயன்படுத்தாமல் சீரழிவதை உணர முடியும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த கவுரி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். தேர்வுக்குழு அமைப்பது தொடர்பாக அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர்கள்தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர் இல்லாத நிலையில், பட்டமளிப்பு விழா தாமதம் ஆனது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. பட்டச் சான்றுகளில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாததால் அந்தப் பட்டங்களை ஏற்றுக்கொள்ள பல பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.
இன்னொருபுறம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்து வாய்மொழித் தேர்வையும் நிறைவு செய்து விட்டனர். அதன்பின் பல மாதங்களாகியும் இன்று வரை அவர்களுக்கு முனைவர் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை. வழக்கமாக ஒரு வாரத்தில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் பல மாதங்களாக வழங்கப்படாததால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதற்குரிய பயன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
பல்கலைக்கழகம் முடங்கிக் கிடப்பதால் அதன் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் வருவாய் ஆதாரங்களில் முதன்மை ஆதாரமாகத் திகழ்வது தொலைதூரக் கல்வித் திட்டம்தான். 2023&24-ம் ஆண்டில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வாயிலாக பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடிக்கும் கூடுதலாக வருவாய் கிடைத்தது. 2024&25-ம் ஆண்டில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மாணவர் சேர்க்கை 10 சதவீதத்துக்கும் கூடுதலாக குறைந்துவிட்டது. அதன்காரணமாக இனிவரும் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வருமானம் படிப்படியாக குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நானே நேரடி சாட்சியாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைக்கு கணினி ஆய்வகம் அமைக்கப்பட வேண்டியத் தேவை இருப்பதை அறிந்த நான், அதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் நாள் கடிதம் வழங்கினேன். ஆனால், அந்த ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.16 லட்சத்து 98,500 ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நான், அதே தொகையை ஒதுக்கீடு செய்து 2023 பிப்ரவரி 6-ம் நாள் கடிதம் அளித்தேன். இந்த நடைமுறைகள் நிகழ்ந்தபோது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கவுரி பணியாற்றி வந்தார்.
ஆனால், துணைவேந்தர் ஓய்வுபெற்று, அவருக்கு பதிலாக தற்காலிக நிர்வாகக்குழு பொறுப்பேற்ற பிறகு சமூகவியல் துறைக்கு கணினி ஆய்வகம் அமைக்கும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடிதம் கொடுத்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அத்தகைய சூழலில் கணினி ஆய்வகம் அமைக்க நிதி கிடைப்பது பெரும் வாய்ப்பு ஆகும். ஆனால், அதைக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு பல்கலைக்கழகம் முடங்கிக் கிடக்கிறது.
பல்கலைக்கழகச் சட்டங்கள் தொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதை பின்பற்றி சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.