முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

3 months ago 21

கொழும்பு:

இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார். புதிய அதிபர் திசநாயகே தலைமையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபையும் பதவியேற்றது.

இந்நிலையில், இலங்கையில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளை புதிய அரசு மீண்டும் தோண்டி எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்க்கப்படாத கடந்த கால வழக்குகள் மறுவிசாரணை செய்யப்படும் என ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. அதன்படி, பழைய வழக்குகளின் விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? எங்கு தவறு நடந்துள்ளது? போன்ற விவரங்களைக் கண்டறிய பொது பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹல் தல்துவா கூறும்போது, 'தீர்க்கப்படாமல் உள்ள பல முக்கியமான வழக்குகளை மறுவிசாரணை செய்யவேண்டும் என காவல்துறையின் தற்காலிக தலைவரிடம் பொது பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுள்ளது' என்றார்.

மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள வழக்குகளில், 2019-ல் 11 இந்தியர்கள் உட்பட 270-க்கும் மேற்பட்டவர்களை கொன்ற ஈஸ்டர் சண்டே பயங்கரவாத தாக்குதல்கள், 2005-ல் நடந்த தமிழ் பத்திரிகையாளர் கொலை, 2015-ல் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீதான மத்திய வங்கி கடன் பத்திர வெளியீட்டு ஊழல் குற்றச்சாட்டு ஆகிய வழக்குகளும் அடங்கும்.

Read Entire Article