ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் ஆத்தூர், இடது கரையில் முக்காணி அமைந்துள்ளது. ஆற்றின் இடதுகரையில் ஒரு அறையை மட்டும் கொண்ட சிறிய விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே தென்புறத்தில் 5 அடி உயர தூண் நடப்பட்டுள்ளது. இந்த துண்ணில் வெள்ளை அடித்தும், கூடவே பெயின்டும் ஆங்காங்கே பூசப்பட்டிருந்தது. இதில் பழங்கால எழுத்துகள் தென்பட்டன.
இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த ராகுல், தூத்துக்குடி எஸ்ஐ ராஜ்குமார் ஆகியோர் தூணை சுத்தம் செய்து நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 2ம் ஆண்டு தொல்லியல் பட்ட மேற்படிப்பு மாணவல் மல்ராஜ், எழுத்துகளை படி எடுத்தார். அப்போது கல்வெட்டில் தமிழ் மொழியில் 29 வரிகள் பொறிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை உதவி பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்கள், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளதை தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்திற்கு மாற்றினர். அதில் ….நான் கெல்லை….கிடந்த உனை….மொழி நின்ற வெ என்று 29 வரிகள் உள்ளது. இதன் முடிவில் எழுத்து என்ற வார்த்தையுடன் முடிகிறது.
அவர்கள் கூறுகையில், இந்த கல்வெட்டு தகவல்கள் 2 தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. 2ம் தூணை தான் கல்வெட்டின் முடிவில் “எழுத்து” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த 2ம் தூண் ஒரு முற்றுப் பெற்ற கல்வெட்டு எனவும், விண்ணகர என்ற பெருமாள் கோயில் பள்ளிக்குத் தானம் கொடுக்கப்பட்டதையும், கல்வெட்டு சற்று சிதிலமடைந்து உள்ளதால் ராயன் என்பவரின் முழுப் பெயரைச் சரியாக வாசிக்க முடியவில்லை எனவும், தமிழ் வடிவத்தின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு சுமார் 900முதல் 1000ஆண்டுகள் பழமையானது என்றும் கூறினர்.
இந்த கல்வெட்டின் மூலம் இப்பகுதியில் ஒரு பெரிய பெருமாள் கோயில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது எனவும் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பங்கு பெற்ற பேராசிரியர்கள், மாணவர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் இருந்த ஒரே அறையை கொண்ட பெருமாள் கோயில் முன்பும் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வட்டெழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மக்கள் சிதறு தேங்காய் உடைக்க பயன்படுத்தி வந்தனர். இந்தக் கல்வெட்டும் பெருமாள் கோயிலைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு: நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.