தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 hours ago 4

ஊட்டி: நீலகிரியில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு யானைகளுக்கு கரும்பு, மூலிகை கலந்த சத்து நிறைந்த உணவுகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பத்துடன் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் தங்கியுள்ள அவர், 2வது நாளாக இன்று மதியம் 3 மணி அளவில் காரில் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் சென்றார். அங்குள்ள தெப்பக்காடு முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு யானைகளுக்கு மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவு, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதல்வர் யானைகளுக்கு கரும்பு, மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவுகளை வழங்கி முகாமை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை கிராமத்தை திறந்து வைத்தார்.

ரூ.5.6 கோடியில் யானை பாகன்களுக்கான 44 வீடுகள் கொண்ட மாவுத் கிராமத்தை முதல்வர் திறந்து வைத்தார். வனத்துறையினருக்கான 38 வாகனங்களையும் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்கிருந்த பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். இதுதவிர முதுமலையில் படமாக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.

முதல்வர் வருகையையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு காலை முதல் மதியம் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மதியத்துக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

The post தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article