சென்னை:முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை:மங்களகரமான நாளான பிப்.10ம் தேதி திங்கள்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த டிச.5ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் பிப்.10ம் தேதியன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் இண்டாவது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது,” என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
The post முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் : அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.