சென்னை, மே 15: அசாம் எல்லையில் பாதுகாப்பு பணியின்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சென்னை வந்தது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (46). இவருக்கு தேவி (43) என்ற மனைவியும், ஸ்வேதா (17) என்ற மகளும், நாத் (15) என்ற மகனும் உள்ளனர். தேவி, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜெகநாதன், தனது 21 வயது முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக அசாம் எல்லை பகுதியில் பணியில் இருந்து அவர், கடந்த 11ம்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிவிட்டு எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவருடன் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவரை அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை விமான மூலம் அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் தேசியக்கொடி மரியாதை மற்றும் மலர்வளையம் வைத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post அசாம் எல்லை பாதுகாப்பு பணியில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சென்னை வந்தது : ராணுவ மரியாதையுடன் அஞ்சலி appeared first on Dinakaran.