பென்னாகரம், மார்ச் 24: ஒகேனக்கல் மீன் விற்பனை கடைகள் மற்றும் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் ஒகேனக்கல் மீன்வள பண்ணை பணியாளர்கள் தொடர்ந்து 3 வாரங்களாக ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கூடங்கள், வறுவல் மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டதில் பல இடங்களில் கெட்டுபோன மீன்கள், காலாவதியான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஒகேனக்கல் மீன் பண்ணை பணியாளர்களும் ஒன்றிணைந்து மீன் விற்பனை கூடம் மற்றும் குளிர்பான கடைகள், முதலைப் பண்ணை பகுதியில் உள்ள மீன் வறுவல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முதலைப் பண்ணை அருகே உள்ள மீன் வறுவல் கடைகள், அருவி பகுதியில் உள்ள மீன் வறுவல் கடைகளில் இருந்து மீன் வறுவலுக்கு மீண்டும் மீண்டும் உபயோகித்த எண்ணெயை கைப்பற்றி அழித்தனர்.
மேலும் மீன் வறுவல் கடைகள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதுடன், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒகேனக்கல் பகுதியில் உணவுகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஆய்வில் நல்லம்பள்ளி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்குமார், மீன் வளத்துறை மேற்பார்வையாளர் குமரவேல், மீன்வள தேர்வு நிலை பாதுகாவலர் ஜீவா, மீன்வள உதவியாளர் அருண் ஜேசுதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post மீன் விற்பனை, வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.