கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள், நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசி, மாளியாபட்டு, பனமடங்கி, பள்ளத்தூர், காளாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலையையொட்டி உள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதேபோல் நேற்றிரவு பனமடங்கி, பள்ளத்தூர், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து, தென்னை மரங்கள், நெற்பயிர்களை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து அதனை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளால் சேதமான பயிர்களை வருவாய்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை சேதப்படுத்தி வருவது அப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், யானைகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகளால் சேதமான பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் அறிக்கையை பெற்றவுடன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
காட்பாடி புதிய வனச்சரகம்
வேலூர் மாவட்ட வனத்துறையில் வேலூர், குடியாத்தம், ஒடுகத்தூர், பேரணாம்பட்டு ஆகிய வனச்சரக அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட வனப்பகுதியின் ஒரு பாதி குடியாத்தம் வனச்சரக அதிகாரிகள் கண்காணிப்பிலும், மற்றொரு பாதி வேலூர் வனச்சரக அதிகாரிகள் கண்காணிப்பிலும் உள்ளது. இந்நிலையில் காட்பாடி, கே.வி.குப்பம் பகுதிகளை ஒன்றிணைத்து காட்பாடிக்கு என புதிய வனச்சரகம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஏப்ரல் 1ம்தேதிக்கு பிறகு தொடங்கப்படும். மேலும் வேலூர் வனச்சரகத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் புதிய வனச்சரகம் உருவாக்கப்பட உள்ளதால் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உரிய பணிகளும் துரிதமாக நடைபெறும் என வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி தரணி தெரிவித்தார்.
The post கே.வி.குப்பம் அருகே யானைகள் தொடர் அட்டகாசம்; தென்னை, நெற்பயிர்கள் சேதம்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம் appeared first on Dinakaran.