வேலூர்: கோடை காலத்தில் விற்பனையில் கல்லா கட்டும் நோக்கத்தில் ரசாயன ஸ்பிரே தெளித்து பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது. காலாவதி குளிர்பானங்களும் விற்பனைக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, ஜில் என்ற பழச்சாறு, ஐஸ் கிரீம், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பான கடைகளை நாடிச்செல்வது நம்மில் பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்று. இதுபோன்ற பொருட்களை வணிகம் செய்வோருக்கு கோடையில்தான் அடைமழை. இந்த பொருட்கள் தரமாக விற்பனை செய்யப்படுகிறதா? என்று மார்ச் மாதத்தில் இருந்தே, தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில், பல இடங்களில் காலாவதி குளிர்பானங்கள், மோர் பாக்கெட் கைப்பற்றப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, எத்திபான் ஸ்பிரே தெளித்து பழங்களை பழுக்க வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள், இந்த சீசனில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய உணவுப் பொருள்களாக இருக்கிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதால் நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம். கோடை காலத்தில் காலாவதி குளிர்பானங்களை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதில் பெரும்பாலான வியாபாரிகள் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக பஸ் நிலையங்களில் உள்ள வியாபாரிகள் இவ்வாறு அதிகளவு விற்பனை செய்கின்றனர். அதனால்தான், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முதலில் பஸ் நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். இவர்களின் வேட்டையில் பல காபி பார், பேக்கரி கடைக்காரர்கள் சிக்கிக்கொண்டாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான், போலி மற்றும் காலாவதி பொருட்களிடம் இருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்டுபிடிப்பது எப்படி?
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கனமாக இருக்கும். தோல் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தோலை நீக்கினால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கோடை காலத்தில் கல்லா கட்ட மோசடி; ரசாயனத்தில் பழுக்கும் பழங்களும் காலாவதி குளிர்பானமும் ‘டேஞ்சர்’: உஷாராக இருக்க உணவு பாதுகாப்புதுறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.