மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் மதுரை சித்திரைத் திருவிழா துவங்கியது: மே 8ல் திருக்கல்யாணம், 9ம் தேதி தேரோட்டம்

3 hours ago 3

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மே 8ல் திருக்கல்யாணம், மே 9ல் தேரோட்டம் நடைபெறுகின்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10.35 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

சிறப்பு பூஜைகளுக்கு பின் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சித்திரை திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு 12 நாட்களும் காலை, இரவு வேளைகளில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். திருவிழாவின் தொடர்ச்சியாக மே 6ல் பட்டாபிஷேகம், 7ம் தேதி திக்குவிஜயம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 8ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. அன்றிரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

மே 9ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மே 10ம் தேதி சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா விஜயன், அறங்காவலர் குழு தலைவர் ருக்குமணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

* கட்டணச்சீட்டு பதிவு துவக்கம்
மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க கட்டண சீட்டு பதிவு நேற்று துவங்கியது. ரூ.200, ரூ.500க்கான கட்டணச்சீட்டுகளும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் கட்டணச் சீட்டு முன்பதிவிற்கு https://hrce.tn gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in எனும் இணையதளங்களில் மே 2ம் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

தேர்வுபற்றி உறுதி செய்யப்பட்ட தகவல், மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணிற்கு மே 3ம் தேதி அனுப்பப்படும். இதன்பிறகு, மே 4 முதல் 6 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை, மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு மையத்தில் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி கட்டணச் சீட்டை பெறலாம். திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

* மே 12ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
அழகர்கோவில் மலையில் இருந்து மே 10ம் தேதி அழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 12ம் தேதி காலை 5.55 மணி முதல் 6.05 மணிக்குள் அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.  இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பதால், மாநகராட்சி, மாவட்ட மற்றும் காவல்துறை நிர்வாகங்கள் சிறப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளன.

The post மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் மதுரை சித்திரைத் திருவிழா துவங்கியது: மே 8ல் திருக்கல்யாணம், 9ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article