![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36389487-chennai-14.webp)
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கையில் ஆட்சி மாறிய பிறகும், வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. ராமேசுவரம் பகுதியிலிருந்து மூன்று படகுகளில் மீன்பிடிக்க சென்ற 34 மீனவர்கள் கடந்த 25.01.2025ம் தேதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கவனத்திற்கு தெரிவித்து, ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள், கோடியக்கரை அருகில், இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களும் காயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் சட்டவிரோத தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடவடிக்கையை வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. இலங்கை தூதர் அழைத்தும் பேசப்பட்டுள்ளார். இருப்பினும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் நேரடித் தாக்குதல் குறைந்தபாடில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலைக்கு மாறாக தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் அத்துமீறலும், மீனவர்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதாரம் ஏற்படுத்தும் வன் தாக்குதலும் தொடர்வது ஏமாற்றம் அளிக்கிறது.
மீன்பிடி உரிமை தொடர்பாக இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அரசியல் உறுதியுடன் ராஜிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசையும், பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.