மீண்டும் மலர்ந்த பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி: தேர்தல் களம் எப்படி இருக்கும்?

1 week ago 2

சென்னை,

தேர்தல் நேரம் வந்தால்தான் எப்போதுமே அரசியல் களத்தில் அனல் பறக்கும். ஆனால், நேற்று பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சென்னை வருகையால் தமிழக அரசியல் களமே அனல் பறந்தது. அதுவும் சினிமா படத்தில் காட்சிக்கு காட்சி 'டுவிஸ்ட்' இருப்பதைப்போல, அடுத்து என்ன? என்ற வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் யூகிக்க முடியாத அளவுக்கு நடந்தது.

இப்படி மாலை வரை நீடித்த பரபரப்பு, ஒரு வழியாக மத்திய மந்திரி அமித்ஷா - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகு முடிவுக்கு வந்தது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி உறுதியானது.

என்னமோ, இப்போதுதான் பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்ந்தது என்று நினைக்க வேண்டாம். கடந்த (2021-ம் ஆண்டு) சட்டசபை தேர்தலின் போதே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. மேலும், பா.ம.க., த.மா.கா. உள்பட 8 கட்சிகள் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தன. என்றாலும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தேர்தலில் வீழ்த்த முடியவில்லை. தேசிய ஜனநாயககூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் அ.தி.மு.க. 66 இடங்களையும், பா.ம.க. 5 இடங்களையும், பா.ஜ.க.4 இடங்களையும் கைப்பற்றின. மொத்தம் 39.72 சதவீத வாக்குகளை பெற்றன.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 45.38 சதவீத வாக்குகளைகைப்பற்றின. வெற்றி - தோல்விக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 5.66 சதவீதம் தான். எனவே, அதைச் சரிசெய்துவிட்டால் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது. ஆனால், கடந்த தேர்தலில் இதே கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. இந்த முறையும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'பச்சைக் கொடி' காட்ட முயல, அவரது தந்தையான டாக்டர் ராமதாஸ் 'ரெட் சிக்னல்'

போட்டு கூட்டணியில் இணையவிடாமல் செய்துவிட்டார். இப்போது, பா.ம.க.வுக்குள்ளேயே அரசியல் யுத்தம் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முதல் ஆளாக வந்து அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்றுவிட்டார். எது எப்படி என்றாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி இன்னும் முழு பலம் பெறவில்லை. அந்தக் கூட்டணிக்கு இன்னும் தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையாக உள்ளது. ஆனால், வக்பு திருத்த சட்ட மசோதாவை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ.க. நிறைவேற்றி அமல்படுத்தியதால், சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது என்றே தெரிகிறது. மேலும், தலித் சமுதாய மக்களின் வாக்குகளும் எந்த அளவுக்கு கிடைக்கும் என்று கட்டியமிட்டு சொல்ல முடியாது.

எனவே, இந்தக் கூட்டணி வலுப்பெற இன்னும் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இணைய வேண்டும். குறிப்பாக, வாக்கு வங்கி வைத்துள்ள தலித் கட்சி ஒன்று கண்டிப்பாக தேவை.எப்படி, கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைமையில் பல கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவானதோ, அதேபோல் தமிழகத்தில் பலம் வாய்ந்த தி.மு.க.வை வீழ்த்த மெகா கூட்டணி உருவானால்தான் முடியும். சரி, இனி தொகுதி பங்கீட்டுக்கு வருவோம். கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை வகிக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா அறிவித்துவிட்டார். எனவே, முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில், தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை 50:50 என்ற அளவில் சரிபாதி என்றே முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 இடங்கள் அ.தி.மு.க.வுக்கும், மீதமுள்ள 117 இடங்கள் பா.ஜ.க.வுக்கும், மேலும் அந்தக் கூட்டணியில் புதிதாக இணையும் கட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை தனித்து போட்டியிட்டு 6.58 சதவீத வாக்குகளை கைப்பற்றிய சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்தமுறை என்ன முடிவை எடுக்கப்போகிறது?

என்பதை தெளிவாக சொல்லமுடியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அண்ணாமலையும், சீமானும் ஒருவருக்கொருவர் மாறிமாறி புகழ்ந்து கொண்டதை யாரும் மறந்திருக்கமாட்டோம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ஜ.க. கூட்டணியில் நாம் தமிழர் கட்சியும் இணையும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவுக்கும் மத்தியில் புதிதாக அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. இந்தக் கட்சி முதல்முதலாக களம் காணும் 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் 15 முதல் 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து கணிப்பு நடத்தி அறிக்கை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அப்படி என்றால், எந்தெந்த கட்சிகளின் வாக்குகள் விஜய் பக்கம் திரும்பும் என்பது புரியாதபுதிராகவே உள்ளது. அதாவது, ஆளும் கட்சியையும், ஆண்ட கட்சியையும் விரும்பாதவர்கள் விஜய் பக்கம் திரும்புவார்கள் என்றும், குறிப்பாக இளம் வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனவே, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தற்போதைய அரசியல் கணக்கு சரியாக இருக்குமா? அல்லது கடந்த முறைபோல் தவறாகிவிடுமா? என்பது போகபோகத்தான் தெரியும்.

Read Entire Article