மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

5 hours ago 4

சிங்கப்பூர் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. கடந்த தேர்தலில் (2020) மீண்டும் தனது மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 83 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் எதிர்க்கட்சி முன்பைவிட கூடுதல் இடங்களை பிடித்தது. எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 10 ஆக உயர்ந்தது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியின் வாக்கு வங்கியும் 61 சதவீதமாக சரிந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில், சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி (People's Action Party) 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அதோடு பி.ஏ.பி. கட்சியின் வாக்கு சதவிகிதம் 2020 தேர்தலில் 61.2% ஆக இருந்த நிலையில், தற்போது 65.6% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சிங்கப்பூரின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 10 இடங்களை தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் லாரன்ஸ் வாங்கிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமர் லாரன்ஸ் வாங், தலைவராக பொறுப்பேற்ற தனது முதல் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை அதன் தொடர்ச்சியான 14-வது வெற்றிக்குள் வழிநடத்தி, சிங்கப்பூர் மக்களிடமிருந்து மகத்தான ஆணையைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.

தமிழ் சமூகத்துடனான அவரது தொடர்ச்சியான ஈடுபாடும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளும் சிங்கப்பூரின் உள்ளடக்கிய உணர்வைப் பிரதிபலிக்கின்றன. சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article