
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் கண்டது.
ராஜஸ்தானின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி களம் இறங்கினர். இதில் சூர்யவன்ஷி 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த குனால் சிங் ரத்தோர், துருவ் ஜுரெல், வனிந்து ஹசரங்கா ஆகியோர் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ஜெய்ஸ்வால் 34 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஹெட்மையர் களம் கண்டார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ரியான் பராக் சிக்சர் மழை பொழிந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக் 95 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் ஹெட்மையர் 29 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.