மீண்டும் சி.எஸ்.கே-வின் கேப்டனாகும் தோனி..? - வெளியான தகவல்

6 hours ago 3

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை அணி இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளிலிருந்து மீள சென்னை அணி கடுமையாக போராடும். வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 30ம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார். அவர் பேட்டிங் செய்த போது தேஷ்பாண்டே வீசிய பந்து முழங்கையில் தாக்கியதில் அவர் காயத்தை சந்தித்தார்.

அந்த காயத்தில் இருந்து மீண்டு வரும் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கெய்க்வாட் களம் இறங்காத பட்சத்தில் இன்றைய ஆட்டத்தில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.

Read Entire Article