
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ வீரர்கள் ரிஷப் பண்ட், திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மும்பை வீரர் நமன் திர்ரை அவுட் செய்த பின் அதை வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடிய திக்வேஷ் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ப்ரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்திய பின்பும் திக்வேஷ் ரதி வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அப்போது அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.