தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம்: இலங்கையில் பிரதமர் மோடி பேசியது என்ன..?

12 hours ago 1

கொழும்பு,

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றடைந்தார். முன்னதாக பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையின் மூத்த மந்திரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது. அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்கவை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் பிரதமர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்படி பாதுகாப்பு, சுகாதாரம், மருந்து துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்தியா - இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் அவர் மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மதிப்புமிக்க மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று அதிபர் திசாநாயக்கவால் 'இலங்கை மித்ர விபூஷணா' விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை. இது இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்கு ஒரு மரியாதை.

இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இந்தியா - இலங்கை நாடுகள் இடையேயான உறவு மிகவும் நன்றாக உள்ளது.

உண்மையான அண்டை நாடாகவும், நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாங்கள் நின்றுள்ளோம்.

கடந்த 6 மாதங்களில் மட்டும், நாங்கள் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்களை மானியங்களாக மாற்றி உள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் பாச உறவுகளைக் கொண்டுள்ளன. 1960 ஆம் ஆண்டு குஜராத்தின் ஆரவல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்கள், இலங்கைக்கு காட்சிப்படுத்துவதற்காக அனுப்பப்படுகின்றன என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் உள்ள மூன்று கோவியில்களை சீரமைக்க இந்தியா உதவும்.

இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்" என்று அவர் கூறினார்.

Read Entire Article