மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்...3 மாதம் கிரிக்கெட்டுக்கு ஓய்வு - வெளியான தகவல்

3 weeks ago 5

லண்டன்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவேன் என பென் ஸ்டோக்ஸ் உறுதியளித்திருந்த நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது காயமடைந்த பென் ஸ்டோக்ஸ், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது காலில் ஏற்பட்ட தொடை காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின் கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் காயத்தை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read Entire Article