
சென்னை,
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்துக்குப் பிறகு 'வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம்' போன்ற தனுஷ் நடித்த படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
தனுஷ் - அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால், அதற்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி எப்போது அமையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் தற்போது, தனுஷின் 56-வது படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை 'லப்பர் பந்து' படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது தனுஷ் 'இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெயின்' படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
