மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

2 weeks ago 2


பொன்னேரி: மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-கும்மடிப்பூண்டி ரயில் மார்க்கம் இடையே மீஞ்சூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ரயில்வே கேட்டை நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. மேலும், அங்கு நடந்து வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளும் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்வதற்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதகதியில் முடிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை மீஞ்சூரில் அனைத்து வணிக பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரமைப்பின் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவருமான அலெக்சாண்டர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், மீஞ்சூரில் ரயில்வே கேட்டுக்கு பதிலாக சுரங்கப்பாதை அமைப்பதற்கும், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் திருவள்ளூர் எம்பி.சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வலியுறுத்த வேண்டும். அதனை ரயில்வே அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால், மக்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் சுரேஷ், முன்னாள் நகரச் செயலாளர் மோகன்ராஜ், அனஸ், அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் மாரி, வழக்கறிஞர் முகமது அலி, தமிழரசன், காங்கிரஸ் நிர்வாகி அன்பரசு, வழக்கறிஞர் துரை வேல்பாண்டியன், சுகுமார், கம்யூனிஸ்ட் நிர்வாகி கதிர்வேல், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பாலன், ஆனந்தன், விசிக நிர்வாகி அபுபக்கர், பாபுலால், பாஜ நிர்வாகி சிவராஜ், மமக நிர்வாகி யுசுப், சாயின்சா, முஸ்லிம் லீக் நிர்வாகிகள் காஜா மொய்தின், ஹபிப் மஜித், மஜக நிர்வாகி கமால் பாஷா, மக்கள் பிரிதிநிதிகள் கல்பாக்கம் பிரியங்கா துரைராஜன், வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article