அகமதாபாத்: தொழிலதிபர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி – திவா ஷா திருமணம் நேற்று மிக எளிமையாக நடந்தேறியது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு கரண் அதானி, ஜீத் அதானி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரண் அதானிக்கும், பரிதி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும், குஜராத் பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுக்கும் நேற்று திருமணம் நடந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காந்திகிராமில் ஜெயின் பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடந்த திருமண விழாவில், மிகக்குறைந்த அளவிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்து கவுதம் அதானி தன் எக்ஸ் பதிவில், “ இதுஒரு மிகவும் சிறிய மற்றும் தனிப்பட்ட நிகழ்வு. எனவே நாங்கள் விரும்பினாலும் அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இளைய மகன் ஜீத் அதானி – திவா ஷா திருமணத்தையொட்டி, கவுதம் அதானி ஏற்கனவே பல நலத்திட்டங்களுக்கு உதவித்தொகை அளிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கினார். இது மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் அமைக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எளிமையாக நடந்தது அதானி இளைய மகனுக்கு திருமணம்: சுகாதாரம், கல்வி திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி நன்கொடை appeared first on Dinakaran.