புதுடெல்லி: மக்களவையில் மத்திய சென்னை எம்பியும், நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி வருமாறு: ரஷ்யா-உக்ரைன் போரினால் ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக போரில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை விரைவில் இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
மீதமுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவது தொடர்பாக ரஷ்யாவிடமிருந்து ஏதேனும் உறுதிப்பாடுகள் பெறப்பட்டுள்ளதா?. இவ்வாறு பாதிக்கப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்க ரஷ்ய அதிகாரிகளுடன் சமீபத்தில் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதா? இந்த முயற்சியில் உதவுவதற்கு ஏதேனும் சர்வதேச நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள் அல்லது புலனாய்வு வலையமைப்புகள் ஈடுபட்டுள்ளனவா? ஈடுபடுத்தினால், அதன் விவரங்கள் என்ன?
ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்க சட்ட ரீதியான வழிகள் ஏதேனும் ஆராயப்பட்டுள்ளதா? இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க அமைச்சகம் சர்வதேச தூதரக தளங்கள் அல்லது நட்பு நாடுகளை பயன்படுத்துகிறதா? பயன்படுத்தினால் அதன் விவரங்கள் வெளியிடப்படுமா? இந்தியர்களின் மரணம் குறித்த ஊடக அறிக்கைகளை அமைச்சகம் எவ்வாறு சரிபார்த்து உறுதிப்படுத்துகிறது. அவர்களின் உடல்களை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ?. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
The post ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.