'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

1 week ago 4

சென்னை,

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 101-வது படமாக 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த 24-ந் தேதி வெளியான இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஹரி பாஸ்கர் நடித்துள்ள ' மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கல்லூரியில் படிக்கும் ஹரி பாஸ்கர் சக மாணவி லாஸ்லியாவை காதலிக்கிறார். லாஸ்லியாவோ காதலை ஏற்க மறுக்கிறார். படிப்பை முடித்து நான்கு வருடங்களுக்கு பிறகு பணத்துக்காக ஒரு வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்லும் ஹரிபாஸ்கர் அந்த வீட்டு உரிமையாளராக லாஸ்லியாவை பார்த்து அதிர்கிறார்.

ஹரி பாஸ்கர் மீது அனுதாபப்பட்டு தனது கம்பெனியிலேயே வேலை வாங்கி கொடுக்கிறார் லாஸ்லியா. அதோடு தன்னுடன் வேலை பார்க்கும் ரயானை காதலித்து திருமணம் செய்து கொள்ளவும் லாஸ்லியா நிச்சயம் செய்கிறார். ஆனால் லாஸ்லியா தன்னை காதலிப்பதாக ஹரிபாஸ்கர் தவறாக நினைத்து தனக்கு நிச்சயமான திருமணத்தை நிறுத்துகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? ஹரி பாஸ்கர் காதல் கைகூடியதா? என்பது மீதி கதை. 

ஹரி பாஸ்கர் துறுதுறுவென வருகிறார். காதல், காமெடியில் அவரது உடல் மொழிகள் ரசிக்க வைக்கின்றன. லாஸ்லியாவுக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளார் காதல், கோபம், ஏமாற்றம், சோகம் மகிழ்ச்சியில் உணர்வுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

ரயான் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஹரி பாஸ்கர் அப்பா கதபாத்திரத்தில் இளவரசு அசத்துகிறர். அம்மாவாக வரும் உமா ராமச்சந்திரனும் நிறைவு. காமெடி ஏரியாவை ஷாரா கலகலப்பாக நகர்த்துகிறார். கதை முடியும் நிலையிலும் தொடர்ந்து நீள்வது பலகீனம்.

ஓஷே வெங்கட் இசை காட்சிகளோடு ஒன்ற வைத்துள்ளது. குலோத்துங்கன் கேமரா கல்லூரி, ஐடி கம்பெனி, வீடு என்று கதைக்களங்களை அழகாக படம் பிடித்துள்ளது. இந்த கால காதல் அணுகு முறைகளை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி இளைய தலைமுறைக்கு பிடிக்கும் படமாக கொடுத்து இருக்கிறார், இயக்குனர் அருண் ரவிச்சந்திரன்.

 

Read Entire Article