கஜா புயல் இழப்பீடு: பரிசீலிக்க தயார் - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

5 hours ago 3

சென்னை,

கடந்த 2018ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், 56 ஆயிரம் குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30 ஆயிரம் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கஜா புயலால் இடிந்த வீடுகள், பயிர் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய பொதுநல வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என்றும், ஒருவேளை இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும், அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  

Read Entire Article