![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/23/35350435-6.webp)
சென்னை,
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் பாட்டல் ராதா. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், அமீர் மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஸ்கின் மேடையில் பேசும்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது, "பட நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதை பார்த்து மிக வருத்தமாக இருந்தது. அவரை பல மேடைகளில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல ஜாம்பவான்கள், தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மேடைக்கு வந்து சென்றுள்ளனர். சினிமா மேடைக்கென நாகரிகம் இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதா, இயக்குனர் மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும். பிறரை ஒருமையில் பேசும் அவர் என்ன பெரிய அப்பா டக்கரா? பல புத்தகங்களை படிப்பதாக கூறும் நீங்கள் ஒரு போலி அறிவாளி" என நடிகர் அருள்தாஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.